இஸ்லாம் சட்டத்தை மீறினாரா கலெக்டர்

ல்யாண மேட்டர், கலாட்டாவில் முடிந் திருக்கிறது! 

கடந்த 10 மாதங்களில் 100 குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தி, சாதனை புரிந்து உள்ளது பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம். அப்படி நிறுத்தப்பட்ட ஒரு திருமணம்தான், மாவட்டக் கலெக்டர் தாரேஷ் அஹமது மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளை போராட்டக் களத்தில் இறக்கி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மா பாளை யத்தைச் சேர்ந்த ராஜ் முகமதுவின் மகன் சாகுல் ஹமீது என்பவருக்கும், அரும்பாவூரைச் சேர்ந்த அப்துல்கபூரின் 17 வயது மகளான ஜுபைரா பேகம் என்பவருக்கும் கடந்த 25-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்கு அரை மணி நேரம் முன்பு மண்டபத்துக்குள் நுழைந்த அதிகாரிகள், '  திருமண வயதை மணப்பெண் எட்டவில்லை’ என்று சொல்லி திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார்கள்.
இதை அடுத்து, 'இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தை மதிக்காமல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்’ என்று மாவட்ட ஆட்சியர் தாரேஷ் அஹமது, ஆர்.டி.ஓ. ரேவதி, சமூகநலத் துறை அலுவலர் பேச்சியம்மாள் ஆகியோருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி, கண்டன ஆர்ப்பாட்டங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்திவருகின்றன.
சாகுல் ஹமீதுவின் தந்தை ராஜ் முகமதுவைச் சந்தித்தோம். ''என் ஒரே மகனான சாகுலுக்கு, இஸ்லாமிய முறைப்படி ஜமாத்தார்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயம் செய்தோம். சொந்தக்காரங்க எல்லாம் மண்டபத்துக்கு வந்து, திருமணச் சடங்குகள் நடந்துட்டு இருந்துச்சு. அந்த நேரத்துல ஆர்.டி.ஓ. ரேவதியும் மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் பேச்சியம்மாளும் மண்டபத்துக்குள் நுழைஞ்சாங்க. 'பெண்ணுக்குத் திருமண வயசு ஆகலைன்னு எங்களுக்குத் தகவல்வந்திருக்கு’னு சொல்லி, பொண்ணையும் மாப்பிளையையும் வேனில் ஏத்தி, கலெக்டர் ஆபீஸ் கொண்டு போயிட்டாங்க. 'எங்க முறைப்படிதான் திருமணம் செய்ய முடிவெடுத்தோம்’னு எவ்வளவோ சொல்லியும், அவங்க காதுல வாங்கிக்கலை. அந்தப் பொண்ணை காப்பகத்திலும், என் பையனை ஜெயிலிலும் போட்டாங்க. நியாயம் கேட்ட எங்களை, 'கேஸ் போட்டுருவோம்’னு சொல்லி மிரட்டுறாங்க. கடைசி நேரத்தில் பொண்ணையும் மாப்பிள்ளையும் தூக்கிட்டுப் போய் விசாரிக்கறதுக்கு பதிலா, அதற்கு முன்னதாகவே வந்து பேசி இருக்கலாமே. திடீரென்று திருமணத்தை நிறுத்துவதால், பெற்றவர்களுக்குத்தானே அவமானம்'' என்றார் வருத்தத்துடன்.

எஸ்.டி.பி.ஐ. (சோஷியல் டெமாக்ரெடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அபூ பக்கர் சித்திக், ''கலெக்டர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு நானும் போய் இருந்தேன். கலெக்டரிடம், 'இஸ்லாமியர்களுக்கான ஷரியத் சட்டம், பெண்ணுக்கு 15 வயது நிறைவடைந்து இருந்தால், அவர் திருமணம் செய்து கொள்ளும் தகுதி உடையவள்’ என்கிறது. இதையே இந்தியா முழுவதும் காலங்காலமாக இஸ்லாமியர்கள் கடைபிடிக்கிறார்கள். இதைக் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.பி.கார்கில் மற்றும் ரவிந்தரபட் ஆகியோர் அடங்கிய டிவிஷன்பெஞ்ச் அளித்த தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது. '15 வயது நிறைவடைந்த இஸ்லாமியப் பெண் திருமணம் செய்துகொள்வது, இந்திய அரசியலமைப்பு சட்டம் இஸ்லாமியர்களுக்குக் கொடுத்துள்ள மதச் சுதந்திரம்’ என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர். எனவே ஜுபைரா பேகத்துக்கு 17 வயது முடிந்திருப்பதால், ஷரியத் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளத் தகுதி இருக்கிறது என்று கலெக்டரிடம் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும், அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. குழந்தைகள் திருமண தடைச் சட்டம் 2005-ன் கீழ் சிறையில் அடைத்துவிட்டார்.

திருமண தடைச் சட்டம் இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது. இஸ்லாமியர்களின் மதச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்படுகிறார் கலெக்டர். எனவே அவரை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராடுகிறோம். ஷரியத் சட்டத்தை மதிக்காத இவர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க இருக்கிறோம்'' என்றார் கோபமாக.

இதுகுறித்து கலெக்டர் தாரேஷ் அஹமதுவிடம் கேட்டோம். ''எங்களுக்கு எப்போது தகவல் கிடைக்கிறதோ, அப்போதே சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரிக்கிறோம். பெண்ணின் ஸ்கூல் டி.சி-யைப் பார்த்து வயதை உறுதிப்படுத்திய பின்னரே, திருமணத்தை தடுத்து நிறுத்துகிறோம். மணப்பெண் படிக்க விரும்பினால், படிப்பதற்கான வசதிகளை செய்துகொடுக்கிறோம். இல்லை என்றால், பெண் குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைத்து விடுவோம். அதன் பிறகு நீதிமன்றத்தில் விசாரிக்கப் படுவதுதான் வழக்கம். இந்த விஷயத்திலும் இதுதான் நடந்தது.

குழந்தைத் திருமணத்தை தடுக்க கிராமங்களில் தண்டோரா, கிராம சபைகளில் தீர்மானம் ஆகியவை போடப்படுகிறது. குழந்தைத் திருமணம் பற்றி அந்தந்தப் பகுதிகளில் உள்ள களப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கிராம சுகாதாரச் செவிலியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். என்னைப் பொறுத்தவரையில் சட்டம் எல்லாருக்கும் பொதுவானது. அதைத்தான் நான் செய்கிறேன்'' என்று தனது முடிவில் உறுதியாக நின்றார்.
எந்தச் சட்டம் என்பது தானே இங்கே பிரச்னை!

- சி.ஆனந்தகுமார்
படங்கள்: எம்.ராமசாமி

நன்றி: ஜூனியர் விகடன்

No comments:

Powered by Blogger.